செய்தி: நிரல்
ஒக். 18 22:30

பதுளையில் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்

(மலையகம்) மலையக தோட்டத் தொழிலாளர்கள் தமது வேதனத்தை அதிகரித்துத் தருமாறு வலியுறுத்தி பல வழிகளிலும் கண்டனப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில், பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையுடன் கூடியதாக நூலகம், ஆய்வுகூடம் மற்றும் கட்டடங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் வலியுறுத்தி இன்றைய தினம் பதுளை நகரில் கையெழுத்து திரட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஒக். 18 21:52

பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியைப் பயன்படுத்துவதற்கு அச்சமாக உள்ளதாக மக்கள் விசனம்

(வவுனியா, ஈழம்) இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் நகரை அண்டிய பகுதிகளோடு முடிவடைந்து விடுவதால் கிராமப்புற மக்கள் அடிப்படை வசதிகள் கூட இன்றி அல்லலுறுவதாக வவுனியா - குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதியைப் பயன்படுத்தும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். குடியிருப்பு பகுதியிலிருந்து பூந்தோட்டம் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாத காரணத்தால் பாடசாலை மாணவர்கள், முச்சக்கரவண்டிகள், துவிச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொள்பவர்கள் உட்பட அப்பகுதி வாழ் மக்கள் அனைவரும் கடும் நெருக்கடிகளுக்கு ஆளாகுவதுடன் பாடசாலை மாணவர்கள் அடிக்கடி விபத்துக்களுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஒக். 18 09:02

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மாதாந்தம் ஆறாயிரம் ரூபா?

(யாழ்ப்பாணம், ஈழம் ) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளோரின் உறவினர்களுக்கான இழப்பீட்டுத் தொகையாக மாதாந்தம் ஆறாயிரம் ரூபா வழங்குமாறு மைத்திரி - ரணில் தலைமையிலான இலங்கை ஒற்றையாட்சி அரசாங்கத்திடம் தாம் பரிந்துரைத்துள்ளதாக இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். எனினும் இந்த ஆறாயிரம் ரூபா கொடுப்பனவை அரசாங்கம் அங்கீகரித்துள்ளமையானது 1 வருடத்துக்கும் மேலாக தங்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் தேடுதல் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்யும் முயற்றி என முல்லைத்தீவைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஒக். 16 10:17

காஞ்சூரமோட்டையில் குடியேறும் மக்களுக்கு கொலை அச்சுறுத்தல்- சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

வவுனியா- காஞ்சூரமோட்டை பகுதியில் குடியேறும் மக்களுக்கும், மக்களது மீள்குடியேற்றம் தொடர்பில் நடவடிக்கை எடுத்துவரும் அதிகாரிகளுக்கும் இல்ங்கை ஜனாதிபதியின் இணைப்பாளர் ஒருவர் கொலை அச்சுறுத்தல் விடுத்து வருவதாக, இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வவுனியா வடக்குப் பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தின்போதே, சிவசக்தி ஆனந்தன் பகிரங்கமாக இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். போர் காரணமாக இடம்பெயர்ந்து இதுவரை தமது சொந்த இடங்களில் மீள்குடியேறாதுள்ள மக்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் போது, வனவளத் திணைக்களம் குறித்த காணிகள் தமக்கு உரியவை எனத் தெரிவித்து காணி உரிமையாளர்களான மக்களுக்கு தொடர்ச்சியாக இன்னல்களை கொடுத்து வருவதாக தெரிவித்தார்.
ஒக். 16 05:15

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மைத்திரி - ரணில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை

(மட்டக்களப்பு, ஈழம்) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்காக மைத்திரி - ரணில் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டறியும் அலுவலகத்தின் செயற்பாடுகள் மந்தகதியில் இடம்பெறுவதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்க உறுப்பினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இழப்பீடுகளும், நிவாரணங்களும் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாக இருந்தபேபாதும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் காணாமல் போன உறவினர் ஒருவரின் சகோதரி ச.சங்கீத்தா தெரிவித்துள்ளார்.