நிரல்
செப். 17 22:54

சென்னையில் திரையிடப்பட்டது தென்கொரிய மொழிப் படம் பண்டோரா !

(சென்னை, தமிழ்நாடு) அணு உலையின் கொடிய முகத்தைப் பற்றியும் அதன் அரசியலையும் எடுத்துச்சொன்ன தென்கொரிய திரைப்படம் 'பண்டோரா - Pandora' , சென்னை தேனாம்பேட்டையில் உள்ள இயக்குநர் பாரதிராஜா அவர்களின் திரையரங்கில் சிறப்புக்காட்சியாக 15.09.2018 அன்று திரையிடப்பட்டு பொதுவெளி விவாத நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. “தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பல்வேறு உரிமைசார் போராட்டங்களுக்கான அறவழி பெருந்திரள் மக்கள் வடிவத்தை உருவாக்கியதில் கூடங்குளப் போராட்டத்திற்கென தனி பங்குண்டு” எனவும் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் அப்போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளதாக” நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த அணுசக்திக்கெதிரான மாணவ அமைப்பினர் தெரிவித்தனர்.
செப். 17 19:53

கிண்ணையடி கிராமத்தினுடாகச் செல்லும் ஆற்றைக் கடக்க சிறிய தோணியில் ஆபத்தான பயணம்- மக்கள்

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிண்ணையடி கிராமத்தினுடாகச் செல்லும் ஆற்றைக் கடக்க ஆபத்துமிக்க சிறிய தோணியி்ல் பயணம் செய்து வருவதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். மைத்திரி- ரணில் அரசாங்கம் பாலம் ஒன்றை அமைத்துத் தருவாதாகக் கூறியபோதும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையென கிண்ணையடி கிராமத்தைச் சேர்ந்த சே.நாகேந்திரன் கூறினார். நூற்றுக்கணக்கான மக்கள் உயிரைப்பணயம் வைத்து சிறிய தோணியில் நீ்ண்டகாலமாக பயணம் செய்கின்றனர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு சாராவெளி, முறுக்கதீவு, பிரம்படித்தீவு, போன்ற கிராமங்களில் நூற்றுக் கணக்கான ஏக்கர் வயல் நிலங்களும் உண்டு. அங்கு செய்கை பண்ண, ஐம்பது வருடங்களுக்கும் மேலாக இந்தப் பாதையை பயன்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
செப். 17 15:07

முல்லைத்தீவுக் கடலில் சட்டவிரோத மீன்பிடிக்கு இலங்கை அரசாங்கம் அனுமதி- மீனவர்கள் குற்றச்சாட்டு

(முல்லைத்தீவு, ஈழம்) வடமாகாணம் முல்லைத்தீவு மாவட்ட கடற்பிரதேசத்தில் மீன்பிடித் தொழிலுக்கு தடை செய்யப்பட்ட சுருக்குவலையைத் தற்காலிகமாகப் பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் மீண்டும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கறுப்புத் துணிகளினால் தமது வாய்களைக் கட்டி முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக அமைதியான போராட்டம் ஒன்றை நடத்தினர். இன்று திங்கட்கிழமை காலை போராட்டம் ஆரம்பமானது. சட்டவிரோத மீன்பிடிக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அமைச்சர் விஜிதமுனி சொய்ஸா கடந்த மாதம் முல்லைத்தீவுக்கு நேரில்ச் சென்று மீனவர்களிடம் உறுதியளித்திருந்தார்.
செப். 17 00:01

ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் வேட்பாளர் யார்? மஹிந்த கூறுவது என்ன?

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மைத்திரி- ரணில் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின பொதுவேட்பாளராக கோட்டபய ராஜபக்ச நியமிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார். தனது சகோதரர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என மஹிந்த ராஜபக்ச இநதியாவில் த ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலும் கூறியிருந்தார். பின்னர் தனது கருத்தில் மாற்றம் இல்லை என்ற தொனியில் அவர் கொழும்பிலும் அவ்வாறு தெரிவித்திருந்தார்.
செப். 16 14:59

முறாவோடை சைவ ஆலயங்களின் தீர்த்தக் கிணறுகளுக்குள் கால்நடைகளின் கழிவுகள் கொட்டப்படுவதாக முறைப்பாடு

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழர்கள் வாழும் பகுதியில் கால்நடைகளின் கழிவுப் பொருட்கள் கொட்டப்படுவதாக கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் க.கிருஸ்ணப்பிள்ளை குற்றம் சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள முறாவோடை தமிழ் கிராமத்தில் உள்ள காளி கோவில் மற்றும் மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் முறாவோடை பிரதேசத்தைச் சேர்ந்த மாடு, ஆடு இறைச்சி வியாபாரம் செய்யும் சில நபர்கள் கழிவுப் பொருட்களை இரவு வேளைகளில் கொட்டிவிட்டுச் செல்வதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். 1990ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் உதவியுடன், ஊர்காவல் படையினர், முறாவோடை தமிழ் கிராமத்திலிருந்து மக்கள் அனைவரையும் விரட்டியடித்திருந்தனர். தமிழ் மக்களின் நிலங்களையும் அபகரித்திருந்தனர்.
செப். 15 22:13

மன்னார் முள்ளிக்குளம் பிரதேசத்தில் இலங்கைக் கடற்படை நிரந்தர கட்டடங்களை அமைப்பதாக முறைப்பாடு

(மன்னார், ஈழம்) மன்னார் மாவட்டம் முசலி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட முள்ளிக்குளம் தமிழ் கிராமத்தை ஆக்கிரமித்து தளம் அமைத்துள்ள இலங்கை கடற்படையினர் அங்கு நிரந்தர கட்டடங்களை நிர்மாணித்து வருகின்றனர். 2007 ஆம் ஆண்டு மன்னார் சிலாவத்துறையை இலங்கைப் படையினர் ஆக்கிரமித்திருந்தனர். இதனால் அருகில் உள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் இலங்கை இராணுவத்தினரால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அதன் பின்னர் முள்ளிக்குளம் கிராமம் முற்றுமுழுதாக இலங்கை கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின்னர் இலங்கைக் கடற்படையினர் இங்கு பாரிய கடற்படைத்தளம் ஒன்றை அமைத்தனர். இலங்கையின் வடமேற்கு கடற்பிராந்தியத்தின் கட்டளைத் தலைமையகத்தையும் முள்ளிக்குளம் கிராமத்தில் நிறுவிக் கொண்டனர்.
செப். 15 12:51

மன்னார் போர்க்கால மனிதப் புதைகுழியில் இருந்து மேலும் எலும்புக்கூடுகள் மீட்பு

வடமாகாணம் மன்னார் நகர நுழைவாசலில் உள்ள இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான சதொச விற்பனை நிலைய வளாகத்தில் உள்ள போர்க்கால மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் 71 ஆவது நாளாக நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. கைகால்கள் பிணைக்கப்பட்டவாறு மூன்று எலும்புக்கூடுகள் தென்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். புதைகுழி அகழ்வுப் பணிகள் வியாழக்கிழமை இடம்பெற்றபோது கைகால்கள் பிணைக்கப்பட்ட நிலையில் எலும்புக்கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை மேலும் மூன்று எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகழ்வுப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் கூறுகின்றனர். அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகள் உரிய முறையில் அடக்கம் செய்யப்படவில்லையெனவும் மீட்ப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
செப். 14 23:35

இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையென கண்டனம்

(மன்னார், ஈழம்) இலங்கை வடபுல கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பாக மைத்திரி- ரணில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை. மாறாக இந்திய மீனவர்களின் படகுகளைக் கையளிப்பதில் மாத்திரம் அதீத அக்கறை காட்டுவதாக வடமாகாண கடற்தொழிலாளர்களின் இணையத்தின் தலைவரும், மன்னார் மாவட்ட மீனவ சமாசத்தின் உபதலைவருமான எம்.ஏ.ஆலம் கண்டனம் வெளியிட்டுள்ளார். இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் இலங்கை வடபுல கடற்பரப்பிற்குள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருகின்றன. இவர்களின் சட்டவிரோத மீன்பிடி முறையினால் வடபுல கடற்பரப்பில் மீன்வளம் மிக வேகமாக அழிவுறும் அபாயமும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செப். 14 19:22

திருகோணமலையை அமெரிக்காவுக்குத் தாரை வார்த்தது மோடி அரசு

மூன்று இந்தியக் கடற்படைப் போர்க் கலங்கள் இலங்கைக் கடற்படையுடன் திருகோணமலையில் கடந்த ஆறாம் திகதியில் இருந்து 13ம்திகதி வியாழன் வரை SLINEX-2018 என்ற இணைப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. அமெரிக்காவும், ஜப்பானும் கடந்த மாத இறுதிப் பகுதியில் இதேபோன்ற இணைப் பயிற்சிகளை இலங்கைக் கடற்படையுடன் இதே திருமலையில் மேற்கொண்டிருந்ததன் இணைபிரியாத் தொடர்ச்சியே இதுவாகும். இணைப் பயிற்சிகள் வழங்குதல் மற்றும் கடற்படைக் கலங்களை அன்பளிப்புச் செய்தல் என்று அமெரிக்காவும் ஜப்பானும் இந்தியாவும் திருகோணமலையை மையப்படுத்தி இலங்கைக் கடற்படையை வலுப்படுத்துவதில் மிகுந்த முனைப்புக் காட்டிவருகின்றன.
செப். 14 18:36

வவுனியா அருவியாறு நீர்த்தேகக் கதவுகளைத் திறந்து நீரைப் பயன்படுத்தும் இலங்கை இராணுவம்- விசாயிகள் பாதிப்பு

(வவுனியா, ஈழம் ) வடமாகாணம் வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவியாற்று நீர்த்தேக்க துருசுக் கதவுகளை இலங்கை இராணுவத்தினர் அத்துமீறி உடைத்து பயன்படுத்துவதால் விவசாயச் செய்கையை கைவிட்டுள்ளதாக பிரதேச மக்கள் கூறுகின்றனர். அருவியாறு பாவற்குளத்திலிருந்து செட்டிகுளம் ஊடாக பாய்ந்து செல்கின்றது. இவ்வாறு பாய்ந்து செல்லும் அருவிக்கு அருகில் உள்ள கிறிஸ்தவகுளத்தில் அருவித்தோட்டம் என்ற பகுதியில் அணைக்கட்டொன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்த அருவித்தோட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் நீண்டகாலமாக ஈடுபட்ட விவசாயிகள், இலங்கை இராணுவத்தின் அத்துமீறிய செயற்பாடுகளினால் எதுவுமே செய்ய முடியாதநிலையில், விவசாயச் செய்கையை கைவிட்டுள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் வாழ்வாதார பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.