நிரல்
ஜூன் 15 19:07

காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி அறியும் அலுவலர்களை வெளியேறுமாறு மக்கள் போராட்டம்

(திருகோணமலை, ஈழம்) போர் இடம்பெற்றபோது காணாமல் ஆக்கப்பட்டோர் என எவரும் இல்லையென்று கூறிய கொழும்பு அரசாங்கம், எதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை அறியும் அலுவலகத்தை அமைத்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அலையும் உறவுகளின் தலைவி நாகேந்திரன் ஆஷா தெரிவித்தார். கொழும்பை மையப்படுத்தி செயற்படும் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை கண்டறிவதற்கான அலுவலக அதிகாரிகள், 13 ஆம் திகதி புதன்கிழமை திருகோணமலைக்குச் சென்றிருந்தனர். அந்த அதிகாரிகளை வெளியேற்றுமாறு கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இது குறித்து கூர்மை செய்தித் தளத்திற்கு வியாழக்கிழமை கருத்து வெளியிட்ட அவர், இலங்கை ஒற்றையாட்சி அரசின் மீதும் அந்த அரசின் உயர் அதிகாரிகள் மீதும் நம்பிக்கை இல்லையென்று கூறினார்.
ஜூன் 15 15:04

கோதபாஜ ராஜபக்ச, ஜனாதிபதி வேட்பாளராக வருவதற்குத் தகுதியுடைவர் என்கின்றார் எஸ்.பி. திஸாநாயக்க

(வவுனியா, ஈழம் ) இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிற்குவதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கடசிக்குப் பிரச்சினையில்லை என மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்கா இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுடன், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கலந்துரையாடி வருவதாக கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 15 11:19

மனிதாபிமான பணிகளைக் கூட இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால தடுக்கின்றார்- முதலமைச்சர் விக்னேஸ்வரன்

(யாழ்ப்பாணம், ஈழம் ) தமிழர் தாயகப் பகுதிகளில் வாழ்வார உதவிகளை இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்க மறுப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என வடமாகாண சபை முதமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்காக அமைச்சர் சுவாமிநாதனால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பத்திரம் நியாயமானது. ஆனால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதனை நிராகரித்துள்ளார். இது மனிதாபிமானம் அற்ற செயல் என்று முதலமைச்சர் விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணனை சந்தித்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ளார். அதவேளை, கொழும்பு அரசாங்கம் மாகாண சபைகளின் அதிகாரங்களில் தலையிடுவதாக வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 14 14:43

தமிழர் தாயக பிரதேசங்களில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- வடமாகாண சபை தீவிர ஆலோசனை

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஈழத் தமிழர்களிடையே பிரித்தாளும் தந்திரத்தை கையாண்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். மைத்திரிபால சிறிசேனவும் ரணிலும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, அபிவிருத்தி என்ற பெயரில் கூட்டங்களை நடத்துவதாகவும், ஆனால் வடமாகாண சபையுடன் கலந்துரையாடுவதில்லை என்றும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதேவேளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட யாரும் தமிழ் இனவாதத்தை பேசுவதில்லை என்றும் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை பற்றியே சுட்டிக்காட்டுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 13 22:51

இலங்கைத் தீவின் அனைத்து இடங்களிலும் புத்தர் சிலைகள் அமைக்கப்படும்- அமைச்சர் சஜித் பிரேமதாச

(யாழ்ப்பாணம், ஈழம் ) வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்கள் உள்ளிட்ட இலங்கைத் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் பெரியளவிலான புத்தர் சிலைகளை அமைக்கவுள்ளதாக இலங்கை வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் நினைவு தினத்தை முன்னிட்டு, புத்தர் சிலைகளை அமைக்கவுள்ளதாகவும், எதிர்வரும் 23 ஆம் திகதி பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் சஜித் பிரேமதாச கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கூறினார். அதேவேளை கடந்த ஒன்பது ஆண்டுகளில் இலங்கைப் படையினரின் ஒத்துழைப்புடன் தமிழர் தாயக பிரதேசங்களில் 131 பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்திருந்தார்.
ஜூன் 13 08:42

தமிழ் முஸ்லிம் முரண் நிலையைத் தூண்டி, உரிமைப் பயணத்தைச் சிதைக்கச் சில்லறைச் சதி

(வவுனியா, ஈழம்) ஒற்றையாட்சி அரசியல் யாப்பை ஈழத்தமிழர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற பிரயத்தனமும், அதற்கு ஏதுவாக தமிழ் முஸ்லிம் மக்களிடையே முரண்பாடுகளை ஊக்குவிப்பதும் இலங்கை அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்று பிரபல கல்வியாளர்களும், தமிழ்ச் சட்டத்தரணிகளும் தெரிவித்துள்ளனர். இந்துசமய விவகாரப் பிரதியமைச்சராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த இஸ்லாமியரான காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை குறித்து யாழ் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர்களான கலாநிதி கே.ரி கணேசலிங்கம், கலாநிதி எஸ்.ரகுராம், அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் மற்றும் சட்டத்தரணிகளான காண்டீபன், சத்தியகுமார் ஆகியோர் கூர்மை செய்தித் தளத்திற்குக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இதனிடையே இந்த நகர்வுகளின் பின்னணிகள் பற்றிய அறிவின் தேவை மேலும் அதிகரித்துள்ளது.
ஜூன் 12 17:23

மூன்று வருடத்தில் நான்கு ரில்லியன் கடன் என்கின்றார் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரி ரணில் அரசாங்கம் கடந்த மூன்று வருடத்தில் நான்கு ரில்லியன் ரூபாய்கள் கடன்களைப் பெற்றுள்ளதாக மஹிந்த ராஜபக்ச மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் 10 வருட ஆட்சியில் ஏழு ரில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டுக் கடனாகப் பெறப்பட்டிருந்ததாகவும், ஆனால் மைத்திரி ரணில் அரசாங்கம் மூன்று வருடத்தில் இவ்வளவு கடன்களைப் பெற்றதன் நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடடில் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்
ஜூன் 12 07:48

மாந்தீவு வைத்தியசாலை மரணதண்டனைக் கைதிகளை தடுத்து வைக்கும் சிறைக் கூடமாக மாறும் அபாயம்

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாந்தீவு தொழுநோயளர் வைத்தியசாவைக்கு ஊடகவியலாளர் உட்பட யாரும் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய அந்த வைத்தியசாலையில், தற்போது ஒரே ஒரு நோயாளி மாத்திரமே சிகிச்சை பெறுகின்றார். என்ன காரணத்திற்காக யாருடைய உத்தரவின் பேரில் அங்கு யாரும் செல்ல முடியாதவாறு தடையுத்தரவு போடப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் தொழுநோயர் என்பதால் யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 11 15:15

கடலட்டை தொழிலில் ஈடுபடும் சிங்கள தொழிலாளர்களை வெளியேற்றுமாறு கோரி யாழ் மீனவர்கள் பேரணி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கைப் படையினரின் உதவியுடன், வடமராட்சி கிழக்கில் கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் 1500 பேரை வெளியேற்றுமாறுகோரி, கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புறக்கணித்தனர். கலந்துகொள்வதற்காகச் சென்ற தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஜூன் 11 08:02

இலங்கை பிரதான மூலோபாய அமைவிடம் என்கிறார் சீன வங்கி முகாமையாளர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) சீன அரசுக்கான மூலோபாய அமைவிடமாகவும் ஏனைய வர்த்தக செயற்பாடுகளுக்கும் இலங்கையை சீனா, தனது பிரதான மையமாக மாற்றி வருவதாகவும் கூறியுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி ரணில் அரசாங்கமே அதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலேதான் சீன முதலீடுகளுக்கான அதிகளவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்