நிரல்
ஜூன் 16 23:07

சென்னை மாநாடு: இலங்கையில் நடைபெற்றது உள் நாட்டுப் போர் அல்ல; இன அழிப்புக்குப் பலர் பொறுப்பு

(சென்னை, தமிழ் நாடு) தமிழ்நாடு, சென்னையில் ஜூன் 9 ஆம் நாள், அனைத்துலக ஈழத்தமிழர் உரிமை மையம் என்ற அமைப்பின் பெயரில், ஈழத்தமிழர் ஆதரவு வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு என்ற தலைப்போடு, ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டி பன்னாட்டு வழக்கறிஞர்கள் மாநாடு நடந்தேறியது. ஓய்வு பெற்ற நீதிபதி து. அரிபரந்தாமன் அவர்களின் தலைமையில், தமிழகம், ஈழம், மற்றும் இந்தியாவினுள் உள்ள பிற மாநிலங்கள் உட்பட சர்வதேச நாடுகளில் இருந்தும் வழக்குரைஞர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். ஈழத்தமிழர்களுக்கான குற்றவியல் நீதியும், ஈடுசெய் நீதியும் மறுக்கப்படக்கூடாது, இலங்கையே தன்னைத் தானே விசாரித்துக்கொள்ளும் உள்ளக விசாரணை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் மாநாட்டு அழைப்பிதழில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 12 17:23

மூன்று வருடத்தில் நான்கு ரில்லியன் கடன் என்கின்றார் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன

(மட்டக்களப்பு, ஈழம்) மைத்திரி ரணில் அரசாங்கம் கடந்த மூன்று வருடத்தில் நான்கு ரில்லியன் ரூபாய்கள் கடன்களைப் பெற்றுள்ளதாக மஹிந்த ராஜபக்ச மையப்படுத்திய கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவின் 10 வருட ஆட்சியில் ஏழு ரில்லியன் ரூபாய்கள் வெளிநாட்டுக் கடனாகப் பெறப்பட்டிருந்ததாகவும், ஆனால் மைத்திரி ரணில் அரசாங்கம் மூன்று வருடத்தில் இவ்வளவு கடன்களைப் பெற்றதன் நோக்கம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாடடில் பந்துல குணவர்த்தன இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறார்
ஜூன் 12 07:48

மாந்தீவு வைத்தியசாலை மரணதண்டனைக் கைதிகளை தடுத்து வைக்கும் சிறைக் கூடமாக மாறும் அபாயம்

(மட்டக்களப்பு, ஈழம்) கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாந்தீவு தொழுநோயளர் வைத்தியசாவைக்கு ஊடகவியலாளர் உட்பட யாரும் செல்லமுடியாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 200 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறக்கூடிய அந்த வைத்தியசாலையில், தற்போது ஒரே ஒரு நோயாளி மாத்திரமே சிகிச்சை பெறுகின்றார். என்ன காரணத்திற்காக யாருடைய உத்தரவின் பேரில் அங்கு யாரும் செல்ல முடியாதவாறு தடையுத்தரவு போடப்பட்டது என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் தொழுநோயர் என்பதால் யாரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்று வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
ஜூன் 11 15:15

கடலட்டை தொழிலில் ஈடுபடும் சிங்கள தொழிலாளர்களை வெளியேற்றுமாறு கோரி யாழ் மீனவர்கள் பேரணி

(யாழ்ப்பாணம், ஈழம் ) இலங்கைப் படையினரின் உதவியுடன், வடமராட்சி கிழக்கில் கடல் அட்டை பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள மீனவர்கள் 1500 பேரை வெளியேற்றுமாறுகோரி, கடற்றொழிலாளர் சமாசங்கள் மற்றும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனம் ஆகியன இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது. இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற போராட்டத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புறக்கணித்தனர். கலந்துகொள்வதற்காகச் சென்ற தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஜூன் 11 08:02

இலங்கை பிரதான மூலோபாய அமைவிடம் என்கிறார் சீன வங்கி முகாமையாளர்

(யாழ்ப்பாணம், ஈழம் ) சீன அரசுக்கான மூலோபாய அமைவிடமாகவும் ஏனைய வர்த்தக செயற்பாடுகளுக்கும் இலங்கையை சீனா, தனது பிரதான மையமாக மாற்றி வருவதாகவும் கூறியுள்ள கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன, 2015ஆம் ஆண்டு நல்லாட்சி என்ற பெயரில் உருவாக்கப்பட்ட மைத்திரி ரணில் அரசாங்கமே அதற்கு முக்கிய காரணம் என்றும் கூறியுள்ளார். அதேவேளை மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியிலேதான் சீன முதலீடுகளுக்கான அதிகளவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர, கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கூறியுள்ளார்
ஜூன் 10 19:25

மரணப்படுக்கையிலும் தமிழ் முஸ்லிம் உறவை வலியுறுத்திய மக்கள் காதர்

(மன்னார், ஈழம் ) ஈழத்தமிழர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்குமான உறவுக்கும் நல்லிணக்கத்திற்கும் தனது இறுதிக்கணம் வரை குரல் கொடுத்துவந்த மன்னாரைச் சேர்ந்த முன்னணி ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ‘மக்கள் காதர்’ என்று அறியப்பட்ட முகைதீன் அப்துல் காதர் இன்று ஞாயிற்றுக்கிழமை தனது 74 வது வயதில் இயற்கை எய்தினார். முற்போக்குச் சிந்தனையாளரான இவர் இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்துக்கும் ஒற்றுமைக்கும் தற்புகழ்ச்சியின்றிச் செயலாற்றி வந்தார்.
ஜூன் 10 15:37

வாகரையில் அதிகரிக்கும் சிறார் துஷ்பிரயோகம், கண்டுகொள்ள யாருமில்லை?

(மட்டக்களப்பு, ஈழம் ) மட்டக்களப்பின் கோறளைப்பற்று வடக்கு (வாகரை) பிரதேச செயலாளர் பிரிவில் பல்வேறு தொழில் முயற்சிகள் நிமித்தம் தென்னிலங்கையில் இருந்து வருகை தரும் தொழில் நிறுவனங்கள் வறுமைக்குட்பட்டுள்ள ஈழத் தமிழ்க் கிராமங்களில் தமிழ்ச் சிறார்களைத் தொழிலுக்கு அமர்த்துகின்றன. ஒரு சில இடங்களில் பாலியல் துஷ்பிரயோகமும் இடம்பெறுவதாக சமூக அக்கறை கொண்ட கிராமத்தவர்கள் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவிக்கின்றனர். ஈழத் தமிழர்களின் பண்பாட்டு விழுமியங்கள் சீரழிக்கப்படுவதை, அதிலும் குறிப்பாக வறுமையைப் பயன்படுத்தி சிறுவர் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதை, ஏன் ஒரு நிறுவனங்களும் கண்டுகொள்வதில்லை என்ற கேள்வியையும் அவர்கள் முன்வைக்கின்றனர். ஊடகங்களாவது சமூகத்தின் கண்களைத் திறக்கவேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
ஜூன் 09 14:07

வானளாவிய தொடர்புக் கோபுரத்தில் வேலைக்குச் சென்ற தமிழ் மாணவன் தவறி விழுந்து பரிதாப மரணம்

(வவுனியா, ஈழம்) இலங்கை ஒற்றையாட்சி அரசின் அனுமதியுடன் தீவின் தென்பகுதியை மையமாகக் கொண்டு சீனா பல்வேறு கட்டுமானங்களை நிறுவி வருவது தெரிந்ததே. இந்தவரிசையில் கொழும்பின் மருதானையில் 350 மீற்றர் உயரம் கொண்டதாக, தாமரைக் கோபுரம் (Lotus Tower) என்ற பெயரில் அமைக்கப்பட்டு வரும், தொடர்பாடல் கட்டடத்தில் இணைப்பு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 19 வயது தமிழ் மாணவன் தற்காலிக மின்தூக்கி ஒன்றிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்த பரிதாப சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை நடந்திருக்கிறது. தமிழர் தாயகப் பகுதியான கிளிநொச்சியின் மத்திய கல்லூரியில் 2018 ஆம் ஆண்டு உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞான பாடகல்வி கற்கும் கோனேஸ்வரன் நிதர்ஷன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் என்று கொழும்பில் மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 09 11:35

காத்தான்குடியில் துப்பாக்கிச் சூடு, கஞ்சா விற்பனை செய்தவர் பலியென மக்கள் கூறுகின்றனர்

(மட்டக்களப்பு, ஈழம்) காத்தான்குடி பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் துப்பாக்கிப் பிரயோகத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை என காத்தான்குடி மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்துவோர் தொடர்பாக பொலிஸார் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இலங்கையின் தென்பகுதியில் இருந்து காத்தான்குடி உள்ளிட்ட கிழக்கு மாகாண பிரதேசங்களுக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாகவும் அதற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
ஜூன் 08 19:52

மட்டக்களப்பு காயாங்கேணி வீட்டுத் திட்டத்தில் பாரிய ஊழல் மோசடி, மக்கள் பரிதவிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு காயாங்கேணி கிராமத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் பாரிய ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளதாக வாகரை பிரதேச சபை உறுப்பினர் மெத்திஸ் அன்டன் கூர்மை செய்தித்தளத்திற்குத் தெரிவித்தார். கடந்த 2015ஆம் ஆண்டு 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட காயாங்கேணி கிராமத்திற்கு வழங்கப்பட்ட வீட்டுத் திட்டம் மூன்று வருடங்கள் கடந்தும் இன்னும் பூர்த்தியடையவில்லை எனவும் அவர் கூறினார்.