நிரல்
செப். 13 22:37

அமெரிக்காவையடுத்து இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் திருகோணமலைத் துறைமுகத்தில்- கூட்டுப் பயிற்சியும் நிறைவு

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை நாடாளுமன்றக்குழு ஒன்று கடந்த ஒன்பதாம் திகதி இந்தியாவுக்குச் சென்றி்ந்த நிலையில் கடந்த ஏழாம் திகதி வெள்ளிக்கிழமை இந்தியாவின் மூன்று போர்க் கப்பல்கள் தமிழ் பேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் திருகோணமலைத்துறைமுகத்திற்கு வருகை தந்திருந்தன. ஜப்பான் அமைச்சர் கஸுயுகி நகானே, (Kazuyuki Nakane) ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஒனோடெரா (Itsunori Onodera) ஆகியோர் கடந்த மாத இறுதியில் அடுத்தடுத்து இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், அமெரிக்க எண்ணெய் வள ஆய்வும் திருகோணமலைப் பிரதேசத்தை மையப்படுத்திய ஈழத் தமிழர் கடற்பரப்பில் சென்ற ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியுள்ளது. சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து வாடகைக்குப் பெறப்பட்ட BGP Pioneer என்ற எண்ணெய் வள ஆய்வுக் கப்பல் ஒன்றும் வந்துள்ளது.
செப். 11 18:03

மட்டக்களப்பு வெல்லாவெளி சின்னவத்தை கண்டத்தில் தமிழர்களின் காணிகள் பௌத்த குருமாரினால் அபகரிப்பு

(மட்டக்களப்பு, ஈழம்) மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாகரையின் வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட சின்னவத்தை 25 எம்.சீ 28ஆம் கண்டத்தில் இருக்கும் தமிழர்களது காணிகளை பௌத்த பிக்குமார் அபகரிப்பதாக முறையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் இருக்கும் அம்பேப்பிட்டிய சுமணரெத்தின தேரரும் சின்னவத்தையில் இருக்கும் பௌத்த பிக்குவும் சேர்ந்து தமிழ் அரச அதிகாரிகளை அச்சுறுத்தி காணியை அபகரித்துச் சிங்கள மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக காணி உரிமையாளர் நாகமுத்து லக்சுமணன் கூர்மைச் செய்தித் தளத்திற்குத் தெரிவித்தார். காணிகள் அபகரிக்கப்படுவதை நிறுத்த முடியாதுள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.
செப். 11 15:10

மன்னார் வைத்தியசாலையில் கர்ப்பிணித்தாய்மார்களின் அவல நிலை- தாக்குதல் நடத்தியவர்கள் பிணையில் விடுதலை

(மன்னார், ஈழம்) வடமாகாணம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து கடந்த மூன்று தினங்களில் 22 கர்ப்பிணித்தாய்மார்கள் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையில் இருந்த வைத்தியர் ஒருவர் மீது கடந்த வியாழக்கிழமை காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவத்தைக் கண்டித்து வைத்தியர்கள் பணிப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதல் நடத்தியவர்களை இலங்கைப் பொலிஸார் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். எனினும் குறித்த இரு சந்தேக நபர்களும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செப். 11 10:42

இலங்கையின் அரசியலமைப்பை மீறிய சுப்பிரமணியன் சுவாமியின் பேச்சு- மைத்திரி- ரணிலின் எதிர்வினை என்ன?

(மன்னார், ஈழம்) இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை இந்தியாவின் ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி பாராட்டியுள்ளார். இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி எனவும் அவர் தனது ருவீட்டர் தளத்தில் கூறியுள்ளார். புதுடில்லியில் ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் இந்திய- இலங்கை உறவுகள் தொடர்பாக மஹிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ளார். சம்பந்தனை உள்ளடக்கிய இலங்கை நாடாளுமன்றக் குழு புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்தர மோடியை நேற்றுத் திங்கட்கிழமை சந்தித்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்சவும் புதுடில்லியில் தங்கியுள்ளார். ஹிந்துஸ்த்தான் சங்கம் நடத்தும் நிகழ்வில் உரையாற்றுவதற்கான அழைப்பை சுப்பிரமணியன் சுவாமி இலங்கையின் அம்பாந்தோட்டைக்குச் சென்று மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்திருந்தார்.
செப். 10 16:25

வவுனியா கனகராயன் குளத்தில் முன்னாள் போராளியும் அவரது மனைவி மகள் மீதும் இலங்கைப் பொலிஸார் தாக்குதல்

(கிளிநொச்சி, ஈழம்) வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளி மீதும் அவரது மனைவி, 14 வயது மகள், கைக்குழந்தை மீதும் கனகராயன் குளத்தில் உள்ள இலங்கைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கடுமையாகத் தாக்கியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் காயமடைந்த முன்னாள் போராளியான பே.வசந்தக்குமார் அவரது மனைவி அவரது 14 வயது மகள் ஆகியோர் கிளிநொச்சி வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 வயது மகளுக்கு வயிற்றில் கடுமையான காயங்கள் உள்ளதால் அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
செப். 10 12:57

அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண தமிழ் மாணவர்கள் கடத்தல் தொடர்பான விசாரணைக்கு முன்னிலையாகவில்லை

(மட்டக்களப்பு, ஈழம்) இலங்கை முப்படைகளின் பிரதானியும் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியுமான அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு முன்னிலையாகவில்லை. ஐந்து தமிழ் மாணவர்கள் உள்ளிட்ட பதினொருபேரை கொழும்பில் இருந்து வெள்ளை வானில் கடத்திச் சென்ற பிரதான குற்றவாளியான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சி என்பவருக்கு வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்ல உதவிய குற்றச்சாட்டில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரட்ண, இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூகக் கொள்ளை தொடர்பான விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
செப். 09 22:25

மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் மோகன் இலங்கைப் பொலிஸாரால் திடீரெனக் கைது

(மட்டக்களப்பு, ஈழம்) தமிழ பேசும் மக்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வரும் அத்துமீறல் செயற்பாடுகள், பிரதேச மக்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராட்டம் நடத்தி வரும் மட்டக்களப்பு- தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று ஞாயிற்றுக்கழமை ஏறாவூரில் உள்ள இலங்கைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மட்டக்களப்பு- பெரிய புல்லுமலையில் அமைக்கப்படு வரும் போத்தல் குடிநீர்த் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் இடம்பெற்றது. தமிழ் உணர்வாளர் அமைப்பு இந்தக் ஹர்த்தாலை ஏற்பாடு செய்திருந்தது.
செப். 09 13:57

புதுடில்லிக்குப் பயணம் செய்ய முன்னர் சம்பந்தன் கொழும்பில் உள்ள சர்வதேசப் பிரதிநிதிகளைச் சந்தித்தார்

(மட்டக்களப்பு, ஈழம்) ஜப்பான் அமைச்சர்களின் வருகையின் பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர். (Hanaa-singer) கொழும்பில் உள்ள கனேடிய தூதுவர் டேவிட் மைக்கினோன் (David McKinnon) ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கருடன் நேற்றுச் சனிக்கிழமை சந்திப்பு இடம்பெற்றது. கனேடியத் தூதுவருடனான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் இடம்பெற்றுள்ளது. வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் தற்போதைய நிலைமைகள் குறித்து சம்பந்தன் விரிவாக விளக்கமளித்துள்ளதாக தமிழரசுக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.
செப். 08 22:59

கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய, பசில் இருவரில் யார்? இருவாரங்களில் முடிவு என்கிறார் வாசு

(வவுனியா, ஈழம் ) மஹிந்த ராஜபக்சவை மையப்படுத்திய கூட்டு எதிர்க்சியின் பொது வேட்பாளராக இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சரவையாக அல்லது முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவையா நியமிப்பது என்பது குறித்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினரும் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கிய நண்பருமான வாசுவே நாணயக்கார தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக கோட்டபய ராஜபக்சவை நியமிப்பதற்கு ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் பெயரையும் கூட்டு எதிர்க்கட்சி தற்போது பரிசீலித்து வருவதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
செப். 06 16:57

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏழுவர் குறித்த தீர்ப்பு - விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு

முன்னாள் இந்திய ஒன்றிய பிரதமர் ராஜீவ் காந்தி மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய தமிழ்நாடு அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என இந்திய ஒன்றிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்ஹா, கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு இன்று (06.09.2018) உத்தரவிட்டுள்ளது. 2014இல் வழங்கப்பட்டத் தீர்ப்பிலேயே இது குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தாலும், இந்திய மத்திய அரசு இவ்வழக்கை அரிதிலும் அரிதான வகையில் பார்க்க வேண்டும், ஆதாலால், மாநில அரசுக்கு உரிமை இல்லை என வாதிட்டு வந்த நிலையில், உச்சநீதிமன்ற தமிழக அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.